தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் நிவேதா, பவித்ரா ஆகிய இருவரும் 1192 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். பிரவீன், சரண்ராம், விக்னேஷ்வரன்,வித்யவர்ஷினி ஆகிய நால்வரும் 1190 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அடுத்து என்ன செய்யப்போவது என்ன? என்று தங்கள் கனவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நிவேதா(கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி): ''ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய டெஸ்ட் வைத்தார்கள். மனப்பாடம் பண்ணாமல் புரிந்துகொண்டு படித்தேன். பள்ளி நிர்வாகம் எனக்கு ஊக்கம் கொடுத்தது. சி.ஏ படிக்க வேண்டும் என்பது என் கனவு. என் அண்ணனும், அக்காவும் சி.ஏ படித்திருக்கிறார்கள். அதனால், நானும் சி.ஏ படிக்க ஆசைப்படுகிறேன்'' என்கிறார் நிவேதா.
பவித்ரா(திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி): ''டியூஷன் செல்லாமல் சொந்த முயற்சியால் படித்தேன். பெற்றோர்களின் உற்சாகம் என்னை நன்றாகப் படிக்க வைத்தது. சி.ஏ படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்கிறார் பவித்ரா.
பிரவீன்(நாமக்கல் எஸ்.கே.வி.பள்ளி மாணவர்): ''நான் ரொம்ப கடுமையா உழைச்சுப் படிக்கவில்லை. பள்ளி, பெற்றோர் கொடுத்த ஊக்கமே இதற்குக் காரணம். பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தேன்.பிளஸ் 2வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது மகிழ்ச்சி. மருத்துவம் படித்து நியூராலஜிட் ஆக விருப்பப்படுகிறேன்'' என்கிறார் பிரவீன்.
சரண்ராம்(நாமக்கல் எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்): '' பெற்றோர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மருத்துவராக வேண்டும் என்பது என் கனவு. மருத்துவர் ஆனதும், என்னால் முடிந்த அளவுக்கு இலவச சிகிச்சை அளிப்பேன்'' என்கிறார் சரண்ராம்.
விக்னேஷ்வரன்(ஈரோடு ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்): '' பள்ளி நிர்வாகமும், பெற்ரோர்களின் ஊக்குவிப்பே என் வெற்றிக்குக் காரணம். மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். மாவட்ட ஆட்சியராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்'' என்கிறார் விக்னேஷ்வரன்.
வித்யவர்ஷினி(திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவி): '' பள்ளி நிர்வாகமும், பெற்ரோர்களின் ஊக்குவிப்பே என் வெற்றிக்குக் காரணம். மருத்துவம் படித்து நியூராலஜிஸ்ட் ஆக விரும்புகிறேன்'' என்கிறார் வித்யவர்ஷினி.
பாரதி(நாமக்கல் டிரினிட்டி அகாடமி மாணவி): ''கடுமையாக உழைத்தால் யாரும் ஜெயிக்கலாம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சி.ஏ படிக்க விரும்புகிறேன். அதற்கான பயிற்சியில் இருக்கிறேன்'' என்கிறார் பாரதி.
