புவனேஸ்வர்: ஜப்பான் அணிக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியை இந்திய அணி 'டிரா' செய்தது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், இந்தியா, ஜப்பான் அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடக்கிறது. நேற்று முதல் போட்டி நடந்தது. இப்போட்டி இந்தியாவின் கோதாஜித் சிங், பிரேந்திரா லக்ரா ஆகியோரது 100வது சர்வதேச போட்டியாக அமைந்தது.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் குரோகவா டாய்சி முதல் கோல் அடித்தார். இதற்கு, 44வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் ரகுநாத் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியாவின் ரகுநாத் வீணடித்தார். தொடர்ந்து போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில், இப்போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது.